குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள்
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இந்த கூட்டத்தில் பேளுக்குறிச்சி ஊராட்சி நரசிம்மன்புதூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
நரசிம்மன்புதூர் எம்.ஜி.ஆர்.நகரில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றில் கூடுதலாக பைப் இறக்கப்பட்டது. இருப்பினும் குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி குடிநீரும் சரிவர வருவது இல்லை. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும்.
இதேபோல ராசிபுரம் கோனேரிப்பட்டி காலனிதெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு என அனைத்தும் எங்களுக்கு உள்ளது. எங்களுக்கோ அல்லது எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ வேறு எங்கும் வீடு இல்லை.
எனவே நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தனர்.
ராசிபுரம் தாலுகா முத்துகாளிப்பட்டி அம்பேத்கர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதையொட்டி உள்ள பொதுப்பாதையில் யாரும் செல்லாதவாறு சுற்றுச்சுவர் எழுப்பி, தனிநபர் ஒருவர் தடுத்து விட்டார். இந்த தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை அகற்றப்படவில்லை.
எனவே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தீண்டாமை சுவரை கட்டிய நபர் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். மேலும் தீண்டாமை சுவரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டு உள்ளது.