வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று, மூட்டுவலி உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.
வேலூர்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று, மூட்டுவலி உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிறுநீரக தொற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் குறிப்பிட்ட நாட்களில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்.
இந்தநிலையில் பேரறிவாளனின் உடல் நிலையை பரிசோதனை செய்வதற்காக சிறையில் இருந்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று காலை துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, மூட்டுவலி உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.