சிறுமிகள் பலாத்கார வழக்கு: 3 ஆட்டோ டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை


சிறுமிகள் பலாத்கார வழக்கு: 3 ஆட்டோ டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 8 Aug 2017 4:39 AM IST (Updated: 8 Aug 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிகள் பலாத்கார வழக்கில் கைதான 3 ஆட்டோ டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

புதுச்சேரி,

புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் சரகம் வம்பாகீரபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் சிறுமிகளை அடைத்து வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமிகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் 10–க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் ஆட்டோ டிரைவர்கள் முகமது ஜமீல், முகமது முஸ்தபா, முகமது கனி ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கைதான அவர்கள் 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுவை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


Next Story