தினத்தந்தி செய்தி எதிரொலி திருச்செந்தூர்– நெல்லை பாசஞ்சர் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியால், திருச்செந்தூர்– நெல்லை பாசஞ்சர் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது.
ஆறுமுகநேரி,
‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியால், திருச்செந்தூர்– நெல்லை பாசஞ்சர் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது.
இணைப்பு ரெயில்கள் ரத்துகோவில்பட்டி– நல்லி இடையே தண்டவாள பராமரிப்பு பணி செய்வதற்காக, திருச்செந்தூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு நெல்லை புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56764), நெல்லையில் இருந்து மாலை 6.40 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56765) ஆகியவற்றை கடந்த 1–ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19–ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை தவிர) முழுவதுமாக ரத்து செய்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது.
மேற்கண்ட ரெயில்கள் கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும், கோவை– நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலுக்கும் இணைப்பு ரெயில்களாக உள்ளன. கோவில்பட்டி– நல்லி இடையே தண்டவாள பராமரிப்பு பணிக்கும், நெல்லை– திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்களை நிறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், இது தென் மாவட்டங்களை ரெயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதையே காட்டுகிறது. இதுகுறித்து கடந்த 3–ந்தேதி ‘தினத்தந்தி‘யில் செய்தி வெளியிடப்பட்டது.
ரெயில்கள் நேரம் மாற்றம்இதையடுத்து திருச்செந்தூரில் இருந்து மாலை 5.55 மணிக்கு நெல்லை புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயிலை (வ.எண்.56766) 40 நிமிடத்துக்கு முன்பாக 5.10 மணிக்கு (வியாழக்கிழமை தவிர) புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த ரெயில் கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு இணைப்பு ரெயிலாக அமைகிறது.
அதேபோன்று தண்டவாள பராமரிப்பு பணிக்காக, பழனி– திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் 4 மணி நேரம் தாமதமாக நெல்லை வந்து, மாலை 6.30 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் கோவை– நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக அமைகிறது. தக்க சமயத்தில் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி‘ நாளிதழையும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளையும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.