கோபி அரசு ஆஸ்பத்திரியில் மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கோபி அரசு ஆஸ்பத்திரியில் மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி இறந்த பள்ளி மாணவனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளியை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. அவருடைய மகன் தரணீதரன் (வயது 16). இவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து தரணீதரன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

திடீரென மின்னல் தாக்கியதில் அவன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தான். உடனே அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தரணீதரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று தரணீதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தரணீதரனின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தார்கள். பின்னர் அவனது உடலை போலீசார் பெற்றுக்கொண்டு உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால் உடலை வாங்க அவர்கள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோபி போலீசார், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை அங்கு வந்து தரணீதரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, ‘தரணீதரன் பள்ளி வளாகத்துக்கு வெளியே தான் மின்னல் தாக்கி இறந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள். பள்ளி வளாகத்துக்குள் தான் அவன் இறந்தான். இதற்கு பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் ஆகும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

அதற்கு குன்னத்தூர் போலீசாரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ‘இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறோம். எனவே தற்போது உடலை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றனர். அதைத்தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தரணீதரனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

Next Story