மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 38 வாகனங்கள் ரூ.6¼ லட்சத்துக்கு ஏலம்
மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 38 வாகனங்கள் ரூ.6¼ லட்சத்துக்கு ஏலம்
சேலம் மாவட்டத்தில் சாராயம் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 4 சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, அவை சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 70 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டன. மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்போர் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏலம் எடுக்க வந்தவர்கள் சற்று தயக்கம் காட்டினர். முடிவில் 37 இருசக்கர வாகனங்கள், ஒரே ஒரு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 38 வாகனங்கள் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலம் போகாத வாகனங்கள் வேறு ஒரு தேதியில் மீண்டும் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.