தலைமை ஆசிரியை மீது தாக்குதல் வாலிபர் கைது
திருச்சிற்றம்பலம் அருகே தலைமை ஆசிரியை மீது தாக்குதல் வாலிபர் கைது
திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பொக்கன்விடுதி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது48). இவர் களத்தூர் கிழக்கு கிராமம் அய்யனார்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பள்ளியில் பணியில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (33) என்பவர் பள்ளியில் படிக்கும் தனது சகோதரரின் மகனை பார்க்க அனுமதி கேட்டார். அப்போது புவனேஸ்வரி, உணவு இடைவேளையில் பார்க்குமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர், புவனேஸ்வரியை செருப்பால் அடித்து, காம்பஸ் கருவியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.