தாலுகா அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு கம்மாளப்பட்டி கிராமமக்கள் காலிக்குடங்களுடன் பாலக்கோடு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தில் 900 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் இவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இந்த ஆழ்துளை கிணறு வற்றிவிட்டது. இதன் காரணமாக குடிநீருக்காக இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஏரியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கிராமமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். ஆனால் பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் கம்மாளப்பட்டி கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் அருண்பிரசாத், வருவாய் ஆய்வாளர் பழனிவேல் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகும் கம்மாளப்பட்டி கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என்று கம்மாளப்பட்டி கிராம மக்கள் வலியுறுத்தினார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அடுத்த கட்டமாக சாலைமறியல் போராட்டம், ரேஷன்கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவோம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story