விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் 200 பேர் கைது
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பெங்களூரு–மைசூரு சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டியா,
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக வறண்டு கிடந்த கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 92.55 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,239 கனஅடி வீதம் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. வினாடிக்கு 6,087 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து மைசூரு, மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும், காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதை மட்டும் மாநில அரசு நிறுத்தவில்லை. அதே வேளையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக விவசாயிகளுக்கு கால்வாய் மூலம் மாநில அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த கோரியும், கால்வாயில் தண்ணீரை திறக்க வலியுறுத்தியும் விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, கே.ஆர்.எஸ். அணையில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும், அதனால் கால்வாய் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உடனடியாக கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) மற்றும் கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மண்டியா மாவட்ட விவசாயிகள் சுமார் 200 பேர் மண்டியா டவுன் வழியாக செல்லும் பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்தனர். மேலும் விவசாயிகள் தலைகீழாக நின்றப்படியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த விவசாயிகள் சாலையில் படுத்துக் கொண்டனர். இதையடுத்து போலீசார் விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் நேற்று அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்தூர் டவுன் டி.பி.சர்க்கிளில் மது பங்காரப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.