திருமங்கலம் பகுதியில் தொடர் மழை: நிலத்தில் வெள்ளம் பாய்ந்து பயிர்களை மண்ணால் மூடிய அவலம்


திருமங்கலம் பகுதியில் தொடர் மழை: நிலத்தில் வெள்ளம் பாய்ந்து பயிர்களை மண்ணால் மூடிய அவலம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் பகுதியில் தொடர் மழையால், மழை வெள்ளம் செல்ல வழியில்லாததால், நிலத்தில் பாய்ந்து பயிர்களை மண் மூடிஉள்ளது. ரோடுகள் அரிக்கப்பட்டு சேதமடைந்து விட்டன. விவசாயம் பாதித்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகாவில் உள்ள கிராம பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் ஊருணிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் மானாவாரி விவசாயிகள் நிலத்தில் பயறு, சோளம் போன்ற விதைகளை விதைத்து வருகின்றனர். சிலர் ஏற்கனவே மானாவாரி விதைத்து இருந்ததால், அவைகள் முளைத்து உள்ளன. தொடர்மழையால் சில இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் செல்ல வழியில்லாமல் நிலங்களின் வழியாக வெள்ளமாக சென்று பயிர்களை மண்ணால் மூடிவிட்டு ரோட்டையும் அரித்து பள்ளமாக்கி விட்டது.

திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டையில் இருந்து அரசபட்டி வழியே கொக்குளம் வரை 3 கிலோமீட்டர் தூரம் ரோடு உள்ளது. இந்த ரோடு கடந்த 15 வருடத்திற்கு முன்பு பாரத பிரதமர் சாலை திட்டத்தின் கீழ் ரோடு போடப்பட்டது. அதில் கீழக்கோட்டை கிராம எல்லையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரத்திற்குள் 3 சிறிய பாலங்கள் கட்டபட்டுள்ளன. அதற்கு அடுத்து அரசபட்டி ரோடு வரையுள்ள மீதி தூரத்தில் பாலங்கள் கிடையாது.

பாலம் இல்லாத இடைப்பட்ட தூரத்தில் உள்ள ரோட்டின் இரு புறமும் 500 ஏக்கர் நிலத்தில் மானாவாரி பயிர்கள் விதைக்கப்பட்டு வளர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழைநீர் ரோடு ஓரம் செல்ல வழியில்லாமல் நிலத்தின் வழியே பாய்ந்து மண்ணால் பயிர்களை மூழ்கடித்து சென்று விட்டது.

ரோடு முற்றிலும் அரிக்கப்பட்டு பள்ளமாகிவிட்டது. முதல் பாலத்தில் ரோடு ஓரம் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகி, கற்கள் பெயர்ந்து உள்ளன. இதுகுறித்து மானாவாரி விவசாயி சுந்தரபாண்டி என்பவர் கூறியதாவது:– மழைபெய்தால் நிலத்தில் உள்ள அதிகப்படியான தண்ணீர், ரோடு ஓரம் இருக்கும் கால்வாய் போன்ற பள்ளத்தின் வழியே சென்று ஓடைக்கு செல்லும்.

ஆனால் கீழக்கோட்டை–அரசபட்டி ரோட்டில் குறிப்பிட்ட தூரம் மழை வடிகால் பகுதி மற்றும் சிறுபாலம் இல்லாததால் நிலத்தின் வழியே சென்று பயிர்களை சேதப்படுத்தி, அரிப்பு ஏற்பட்டதால் ரோடு சேதமாகிவிட்டது. எனவே மனாவாரி நிலத்தில் உள்ள மழைநீர் கடந்து செல்ல ரோடு ஓரம் கால்வாயும், சிறு பாலம், கட்டினால் மழைநீர் அருகே உள்ள ஊருணி அல்லது ஓடைக்கு சென்றுவிடும்.

பயிர் சேதமடைவதையும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அந்த பகுதி விவசாயிகள் மழை பெய்தும், பலன் இல்லாமல் போய்விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story