அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே பின்னல்வாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1 முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் பின்னல்வாடி, கள்திருநாகலூர், சிக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் 600–க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தொலைவில் உள்ள தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று பெரும் சிரமங்களுக்கிடையே அங்குள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதனால் பின்னல்வாடி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என்று பின்னல்வாடி உள்ளிட்ட 3 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று காலை 9.45 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து வள்ளி வளாகத்துக்குள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்தபடி பின்னல்வாடி பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தனபால், எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், பள்ளியை தரம் உயர்த்துவது பற்றி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களிடம் கூறினர். இதனை ஏற்ற மாணவர்கள் காலை 10.15 மணியளவில் தங்களது போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைகளுக்குள் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story