370 உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது


370 உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து திருச்செங்கோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 370 உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு,

புதுச்சேரியில் இருந்து உயர்ரக மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து முக்கிய பிரமுகர்கள், ரிக், பஸ் அதிபர்கள், தொழில் அதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் உத்தரவின்பேரில், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஒரு செல்போன் எண் மூலம் மதுபாட்டில்களை விற்பனை செய்பவருக்கு போன் செய்து, வாடிக்கையாளர் போல நடித்து, தங்களுக்கு 10 உயர்ரக மதுபாட்டில்கள் வேண்டும். அவற்றை பரமத்தி வேலூர் பகுதிக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டனர். இதை தருவதாக ஒப்புக்கொண்ட அவர் மதுபாட்டில்களை பரமத்தி வேலூர் பகுதிக்கு தனது உதவியாளர்கள் மூலம் அனுப்பி வைத்தார்.

அங்கு தனிப்படை போலீசார் அந்த மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு, பணமும் கொடுத்தனர். பின்னர் மதுபாட்டில்களை கொண்டு வந்த கும்பலிடம் பேச்சு கொடுத்தவாறே, மதுபாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. எங்கு வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்று கேட்டு தெரிந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்படி திருச்செங்கோடு டவுனில் மலையடிவார பகுதியில் உள்ள செம்படையர் மடம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 370 உயர்ரக “புல்“ மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அங்கு மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த சக்திவேல் மகன் ஜெகதீசன் (வயது 31) என்பவரை கைது செய்து திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பல மாதங்களாக புதுச்சேரியில் இருந்து திருச்செங்கோட்டுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை நடைபெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story