முதலைகளுடன் குளிக்கலாம்..!


முதலைகளுடன் குளிக்கலாம்..!
x
தினத்தந்தி 11 Aug 2017 11:15 PM GMT (Updated: 10 Aug 2017 9:49 AM GMT)

முதலைகள் என்றாலே முரட்டுத்தனமானவை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். கானாவில் உள்ள பாகா நகரில் 2 முதலை குளங்கள் இருக்கின்றன.

இந்த குளத்தில் குழந்தைகள் குளிக்கிறார்கள். பெண்கள் துணி துவைக்கிறார்கள். அவர்களுக்கு அருகிலேயே முதலைகள் பொம்மை போல சாதுவாக அமர்ந்திருக்கின்றன. இதுவரை இந்த ஊரில் முதலை தாக்கி ஒருவரும் உயிர் இழந்ததில்லை என்கிறார்கள். நகரில் முக்கியமான மனிதர்கள் இறந்து போனால், ஒரு முதலையும் இறந்துவிடுமாம். இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இந்த விநோத  கதையை மிஞ்சும் அளவிற்கு ஒரு ஆச்சரிய கதையும் இருக்கிறது. 

ஒரு காலத்தில் பாகா நகர மக்கள் முதலை இறைச்சியைச் சுவைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருநாள் பாகா நகர தலைவரை சிங்கம் விரட்ட, அவர் முதலையின் உதவியை நாடியிருக்கிறார். தன்னை சிங்கத்திடமிருந்து பத்திரமாக காப்பாற்றி, அக்கரையில் சேர்த்தால் பாகா நகர மக்கள் இனி முதலைகளை சாப்பிடமாட்டார்கள் என்று உறுதியாக கூறியிருக்கிறார். முதலையும் அதை ஏற்றுக்கொண்டு, அவரைக் காப்பாற்றி அக்கரை சேர்த்திருக்கிறது என்கிறார்கள். அன்றிலிருந்து இங்கே யாரும் முதலைகளுக்குத் தீங்கு இழைப்பதில்லை. முதலைகளும் மனிதர்களைத் துன்புறுத்துவதில்லை என்று நம்பமுடியாத கதையை நம்பும்படி சொல்கிறார்கள். இந்த புராண கதை பாகா நகர கல்வெட்டிலும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. 

நம்பமுடியாத கதைகளை கேட்பதற்காகவும், பாகா நகர் முதலைகளைப் பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். முதலைகளுக்கு இறைச்சியை உணவாக அளிக்கிறார்கள். பிறகு பெரியவர்களும், குழந்தைகளும் முதலைகளின் முதுகில் அமர்ந்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். மனிதர்களுக்கும், முதலைகளுக்கும் நல்ல புரிந்துணர்வு இங்கே இருக்கிறது.

Next Story