கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி சித்தராமையா பேச்சு


கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி  சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2017 4:51 AM IST (Updated: 11 Aug 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்று முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகரில் மறைந்த முன்னாள் மந்திரியும், கேரள முன்னாள் கவர்னருமான பி.ராசய்யாவுக்கு மாநில அரசின் சார்பில் ரூ.2.10 லட்சம் செலவில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. மண்டபம் கட்டுவதற்கான பணிகளுக்கு முதல்–மந்திரி சித்தராமையா நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் ராசய்யாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

மறைந்த முன்னாள் மந்திரி பி.ராசய்யா எனக்கு அரசியல் குரு ஆவார். அவர் இல்லாவிட்டால் நான் அரசியலில் இந்த அளவுக்கு வளர்ந்து முதல்–மந்திரியாகி இருக்க மாட்டேன். அவர் தன்னலம் எதுவும் இல்லாமல், மக்களுக்காக உழைத்தார். ஆதிதிராவிட மக்களின் நலனுக்காக உழைத்த தன்னிகரற்ற தலைவர் ராசய்யா ஆவார். அவருக்கு மணிமண்டபம் கட்ட நான் அடிக்கல் நாட்டியது பெருமை அளிக்கிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு வந்தால் முதல்–மந்திரி பதவி பறிபோகும் என்று சிலர் கூறி வருகின்றனர். அப்படி என்றால் நான் முதல்–மந்திரியாக பொறுப்பேற்று 6 முறை சாம்ராஜ்நகருக்கு வந்து உள்ளேன். ஆனால் எனது பதவி பறிபோகவில்லை. மாவட்டத்தில் வளர்ச்சிக்காக போதிய அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா 150–க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறி வருகிறார். அவர் பகல் கனவு கண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story