சுரண்டை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு


சுரண்டை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Aug 2017 2:30 AM IST (Updated: 11 Aug 2017 6:58 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரண்டை,

சுரண்டை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கடையை மூடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க புறப்பட்டுச் சென்றனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம்– கலிங்கப்பட்டி ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த 8–ந் தேதி முதல் பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பரங்குன்றாபுரம், கலிங்கப்பட்டி, மருதுபுரம், மரியதாய்புரம், ராமனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று 4–வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இப்பகுதியில் இருந்த இந்த கடையை அகற்றும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று மதியம் கடையை திறக்க கடை ஊழியர்கள் வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை நோக்கி வந்தனர். போலீசார் வைத்திருந்த தடுப்பையையும் தாண்டி வர முற்பட்ட போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தின் முடிவில், டாஸ்மாக் கடை தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ராம உதயசூரியன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரை சந்திக்க நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றனர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்போடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.


Next Story