தனியார் செல்போன் நிறுவனத்திற்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


தனியார் செல்போன் நிறுவனத்திற்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Aug 2017 2:30 AM IST (Updated: 11 Aug 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

சேவை குறைபாட்டிற்காக தனியார் செல்போன் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நெல்லை,

சேவை குறைபாட்டிற்காக தனியார் செல்போன் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரபல நிறுவன செல்போன்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணியை சேர்ந்தவர் குட்டன் கிறிஸ்டோகிங் (வயது 25), இவர் கோவை பீளமேடில் உள்ள ஒரு தனியார் செல்போன் விற்பனை நிறுவனத்தில் கடந்த 31.10.2014 அன்று ஒரு பிரபல நிறுவனத்தின் செல்போனை ரூ.43 ஆயிரத்துக்கு வாங்கினார்.

அந்த செல்போன் தண்ணீரில் விழுந்தால் தண்ணீர் உள்ளே புகாது என்றும், அப்படி தவறி உள்ளே புகுந்தாலும் அதனை மாற்றி கொடுப்பதற்கான ஒரு வருட உத்தரவாதத்தை அந்த தனியார் விற்பனை நிறுவனம் வழங்கியது. அந்த செல்போன் வாங்கிய 6 மாதத்தில் தண்ணீரில் விழுந்தது.

செல்போனில் தண்ணீர் இறங்கியதால் வேலை செய்யவில்லை. குட்டன் கிறிஸ்டோகிங் அந்த பிரபல செல்போன் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நெல்லையில் உள்ள ஒரு மையத்தில் சென்று செல்போனை கொடுத்தார். அதனை பரிசோதித்த ஊழியர்கள் இந்த செல்போனை சரிசெய்ய ரூ.18 ஆயிரம் செலவாகும் என தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த குட்டன் கிறிஸ்டோகிங், வக்கீல் முகமது சலீம் மூலம் நெல்லை நுகர்வோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சேவை குறைபாட்டிற்கு அபராதம்

வழக்கை நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சிவன்மூர்த்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில், குட்டன் கிறிஸ்டோகிங்கிற்கு ரூ.43 ஆயிரம் மதிப்பிலான செல்போனும், சேவை குறைபாட்டிற்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மனஉலைச்சலுக்கு ரூ.3 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.56 ஆயிரத்தை சம்பந்தபட்ட செல்போன் நிறுவனம் வழங்கவேண்டும். மேலும் அன்று சேவைக்காக வசூலித்த ரூ.112 கட்டணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும்.


Next Story