வேலூரில் மாணவியை கடத்திய மெக்கானிக் கைது
சோளிங்கரில் மாணவியை கடத்திய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர்,
சோளிங்கரைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவி அவரது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதுகுறித்து மாணவியின் பெற்றோர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய தேடுதலின்போது அந்த மாணவி சோளிங்கர் பஸ் நிலையம் அருகே நீலகண்டரா£ன்பேட்டை காலனியை சேர்ந்த மெக்கானிக் கோபிநாத் (வயது 21) என்பவருடன் நின்று கொண்டிருந்தார். அந்த மாணவியை கோபிநாத் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கோபிநாத்தை கைது, மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
* வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் இவரது மகன் ஞானகங்கா (19), ஐ.டி.ஐ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஞானகங்கா சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் கடந்த 10–ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆற்காடு டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் ஆற்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிளைவ் பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சுந்தரமூர்த்தி (56) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* திருவலம் ஏரந்தாங்கல் அருகே உள்ள சென்னை – சித்தூர் சாலையில் கடந்த 6–ந் தேதி 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையோரம் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவராஜ் (45) என்பதும், ஏசி.மெக்கானிக் என்பதும் தெரியவந்தது.
தேவராஜ், திருவலம் அருகே உள்ள குகையநல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சாலையில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒதுங்கியபோது இறந்தது தெரியவந்தது.
* சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஏகாம்பரநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏகாம்பரநல்லூர் சுடுகாடு அருகே பொன்னையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
மணல் லாரியில் இருந்த ஏகாம்பரநல்லூரை சேர்ந்த தினேஷ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த தப்பி ஓடிய ஏகாம்பரநல்லூரை சேர்ந்த ரமேஷ், மாங்குப்பத்தை சேர்ந்த தனபால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.