பேரணாம்பட்டு அருகே குடிநீர் குழாய்யை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


பேரணாம்பட்டு அருகே குடிநீர் குழாய்யை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Aug 2017 10:15 PM GMT (Updated: 11 Aug 2017 5:13 PM GMT)

பேரணாம்பட்டு அருகே குடிநீர் குழாய்யை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே ஏரிகுத்தி ஊராட்சியில் உள்ள பேரணாம்பட்டு – மேல்பட்டி சாலையை கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலைதுறையினர் விரிவாக்கம் செய்து வருவதால் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சேதமானது. மேலும் சாலையையொட்டி அமைக்கப்பட்டு இருந்த சின்டெக்ஸ் தொட்டிகளும் அகற்றப்பட்டதால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனை கண்டித்து பொதுமக்கள் கடந்த மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர்.

இதனையடுத்தும் குடிநீர் குழாய்யை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் குழாய்யை சீரமைக்கக்கோரி நேற்று காலையில் பேரணாம்பட்டு – மேல்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் பத்மநாபன், ஒன்றிய ஆணையாளர் அப்துல்கரீம், குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், குடிநீர் குழாய்யை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story