தனியாரின் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அரசு கட்டிடம் கட்டப்படுமா?


தனியாரின் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அரசு கட்டிடம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 12 Aug 2017 3:45 AM IST (Updated: 11 Aug 2017 10:43 PM IST)
t-max-icont-min-icon

அப்போதிய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கானொளி காட்சி மூலம் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதிய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கானொளி காட்சி மூலம் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறந்து வைத்தார். அதற்கு முன்பு செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுகாவை சேர்ந்தவர் ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற வந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக செய்யாறில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தனியாரின் கட்டிடத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட புதிய மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களின் பதிவு, பதிவு பெற்ற வாகனங்களில் தகுதிச்சான்று, வாகன வரி செலுத்தல், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு செலுத்தப்படும் கட்டணங்கள் அலுவலக கேஸ் கவுண்டரில் செலுத்தி ரசீது பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அலுவலகம் தொடங்கி குறுகிய காலத்திலேயே இவ்வலுவகத்தின் மூலம் தமிழக அரசிற்கு மாதந்தோறும் சுமார் ரூ.60 லட்சம் வரை வருவாய் ஈட்டி வந்ததாக தெரிகிறது. இவ்வலுவலகம் மற்ற மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை காட்டிலும் கூடுதல் வருவாய் அரசிற்கு ஈட்டிதாக கூறப்படுகிறது. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முற்றிலும் ஆன்லைன் வசதி ஏற்படுத்தி முன் மாதிரியாக அலுவலகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 முற்றிலும் ஆன்லைன் வசதி ஏற்படுத்திய நிலையில் போதிய அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மேலும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருவதால் அலுவலகத்திற்கு முன்பு போதிய இடவசதியில்லாததால் அலுவலகத்திற்கு அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனத்தின் பரிசோதனை செய்தல், ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்கள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஒரே இடத்தில் அலுவலகம், ஓட்டுநர் உரிமம் பெற சோதனை ஓட்ட ஓடுதளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தமிழக அரசின் சார்பில் புதிய கட்டிடம் இடம் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து புளியரம்பாக்கம் கிராமத்தில் செய்யாறு பணிமனை எதிரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அலுவலகத்திற்காக இடம் ஒதுக்கீடு செய்து 1 வருடமாகிய நிலையில் அத்துறையின் சார்பில் அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

 தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் அரசு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும். பணிகள் துரிதமாக முடித்து அக்கட்டிடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story