சித்தூரில் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ரூ.7 கோடி துணிகள், பொருட்கள் நாசம்
சித்தூரில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 மாடியில் இருந்த துணிகளும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான துணிமணிகள், பொருட்கள் எரிந்து நாசமாயின.
சித்தூர்,
ஆந்திர மாநிலம் சித்தூரில் பழைய பஸ் நிலையம் அருகே சர்ச் தெரு உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த தெருவில் 3 மாடி கட்டிடத்தில் ‘அபூர்வா டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பிரபல துணிக்கடை இயங்கி வந்தது. முதல் தளத்தில் பெண்களுக்கான ஆடைகளும், 2–வது தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகளும், 3–வது தளத்தில் ஆண்களுக்கான ஆடைகளும் விற்பனையாயின. சித்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இங்கு துணிகள் எடுக்க வருவர். கடையில் 70–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைநேரம் முடிந்ததும் இரவில் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இரவு காவலாளியாக பாபு என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் கடையின் முதல்தளத்திலிருந்து புகை வெளியே வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி பாபு உடனடியாக கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு வாகனங்களில் விரைந்து வந்தனர். அப்போது தீ கடை முழுவதும் தீ வேகமாக பரவி எரிந்து கொண்டிருந்தது. கதவை திறந்து தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
அதன் மூலம் கடையின் சுவர் இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2.30 மணி முதல் தீயணைப்பு படையினர் கடைக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியிருந்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 7.30 மணியளவில் தீ முழுவதையும் அணைத்தனர்.
இதனால் அருகே இருந்த கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் 3 மாடிகளில் இருந்த துணிமணிகள், மர பொருட்கள், கல்லாவில் வைத்திருந்த பணம் என அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் ரூ.7 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக ஜவுளிக்கடை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் முதல் சேதம் அடைந்த 3 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. அந்த பகுதியில் யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடந்தன.
தீ விபத்தில் ஜவுளிக்கடை முற்றிலும் எரிந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து சென்ற வண்ணம் இருந்தனர். தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.