அ.தி.மு.க.வை கம்பீரமாக வழிநடத்தும் வல்லமை பெற்றவர் டி.டி.வி. தினகரன்


அ.தி.மு.க.வை கம்பீரமாக வழிநடத்தும் வல்லமை பெற்றவர் டி.டி.வி. தினகரன்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-12T00:02:41+05:30)

அ.தி.மு.க.வை கம்பீரமாக வழிநடத்தும் வல்லமை பெற்றவர் டி.டி.வி. தினகரன் என்று பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா தெரிவித்தார்.

பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது:– மதுரை மாவட்டம் மேலூரில் வருகிற 14–ந்தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். அவரை வரவேற்க பரமக்குடியில் இருந்து 100 வாகனங்களில் 5,000 தொண்டர்கள் சென்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலூரில் நடைபெறும் இந்த விழா தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையையும், மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும். டி.டி.வி. தினகரன் முதல்–அமைச்சராக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் அளிக்கும் அச்சாரமாக அமையும். வருங்கால அரசியலுக்கு புதிய தொடக்கமாக அமையும்.

தமிழக மக்களின் நன்மதிப்பையும், அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையையும் பெற்று டி.டி.வி. தினகரன் அரசியல் களத்தில் போராளியாக விளங்கி வருகிறார். அ.தி.மு.க.வை கம்பீரமாக வழிநடத்தும் வல்லமை பெற்றவர் டி.டி.வி. தினகரன். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போனது தான் வரலாறு. பல சோதனைகளையும், இன்னல்களையும் தாங்கி அவைகளை வென்று சாதனை படைக்கும் இயக்கம் தான் அ.தி.மு.க., ஜெயலலிதா காட்டிய பாதையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story