பூட்டப்பட்ட கன்டெய்னர் லாரியில் கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிசென்ற 2 டிரைவர்கள் கைது
பூட்டப்பட்ட கன்டெய்னர் லாரியில் கேரளாவுக்கு 19 மாடுகளை ஏற்றிச்சென்ற 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். மாடு இரும்பில் மோதியதில் பரிதாபமாக கொம்பு உடைந்தது.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம்பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நேற்று இரவு ஒரு கன்டெய்னர் லாரி நின்றுகொண்டு இருந்தது. அந்த லாரியில் இருந்து மாடுகள் கத்தும் சத்தம் வந்தது. இதுபற்றி விலங்குகள் நல அமைப்பினர் உடனடியாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள். அப்போது லாரியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று இருந்த 2 டிரைவர்கள் அங்கு வந்தார்கள். உடனே போலீசார் அவர்களிடம் கன்டெய்னரை திறக்க சொன்னார்கள்.
கன்டெய்னர் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே 19 மாடுகள் ஒன்றின் மீது ஒன்று உரசியபடி நெருக்கி அடித்துக்கொண்டு நின்றன.
காற்று வசதி இல்லாமல், தண்ணீர் இல்லாமல் அடைக்கப்பட்டதால் சோர்வடைந்த மாடுகள் கத்தியுள்ளன. மேலும் கன்டெய்னரின் பக்கவாட்டு இரும்பில் மோதியதில் சில மாடுகளுக்கு காயம் இருந்தது. ஒரு மாட்டின் கொம்பு உடைந்து இருந்தது.
உடனே போலீசார் லாரியை ஓட்டிவந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் கொல்லேகால் அருகே உள்ள மல்லப்புரத்தை சேர்ந்த சலீம்பாட்சா (48), மாண்டியா மாவட்டம் சிஜிலூர் அருகே உள்ள உடுப்பூராவை சேர்ந்த மக்புல் (50) என்பதும், இருவரும் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக 19 மாடுகளை ஏற்றிச்செல்ல முயன்றதும், வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கன்டெய்னர் லாரிகள் மாடுகளை அடைத்து பூட்டியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதன்பின்னர் போலீசார் 19 மாடுகளையும் பத்திரமாக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரி எதிரே செயல்படும் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு மாடுகளுக்கு தண்ணீர், தீவனம் கொடுத்து ஆசுவாசப்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட 19 மாடுகளையும் பவானி குட்டிபாளையத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.