பழனி–ஈரோடு இடையே ரெயில் பாதை அமைக்கப்படுமா? 3 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
தொழில்கள், சுற்றுலா வளர்ச்சி பெற பழனி–ஈரோடு இடையே ரெயில் பாதை அமைக்கப்படுமா? என்பது 3 மாவட்ட மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
திண்டுக்கல்,
இந்தியாவில் தரைவழி போக்குவரத்தில் ரெயில் சேவை மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. இதனால் ரெயில்வே துறை மிகப்பெரிய துறையாக திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு ரெயில் சேவை, மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றுதல், இரட்டை பாதை அமைத்தல் என பல பணிகள் நடக்கின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் பல பகுதிகளில் ரெயில் பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது.
அவற்றில் பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் பல ஆண்டுகளாக பணிகள் நடப்பது பலருக்கு வேதனையாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் பல முக்கிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்தந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதில் பழனி–ஈரோடு இடையே புதிதாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
பழனியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை வழியாக ஈரோடுக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை ஆகும். திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் வழியாக ரெயில் பாதை அமைந்தால் தொழில் வளர்ச்சி மேம்படும் என்பது 3 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
இந்த ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 மாவட்ட மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் மக்கள் நடத்தி உள்ளனர். இதன் விளைவாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால், அதோடு திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
இதனால் பழனி–ஈரோடு ரெயில் பாதை எனும் மக்களின் கனவு நனவாகாமல் இருந்து வருகிறது. திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை பொறுத்தவரை பல்வேறு தொழில்கள் நடைபெறும் பகுதிகளாக உள்ளன. மேலும் சில சுற்றுலா தலங்களும் உள்ளன. எனவே, பழனி–ஈரோடு ரெயில் பாதை அமைத்து ரெயில்களை இயக்கும்பட்சத்தில் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி பெறும். அதன் மூலம் மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள். எனவே, அந்த ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ரெயில்வேதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது 3 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.