வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் திருடிய வாலிபர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2017 4:15 AM IST (Updated: 12 Aug 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் நகை-பணம் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை மொட்டைவாண்டான் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) விவசாயி. இவருடைய மனைவி தனம். நேற்று ராஜேந்திரன் கோவிலுக்கு சென்று விட்டார். தனம் வீட்டை பூட்டி விட்டு தங்களது தோட்டத்திற்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் ராஜேந்திரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 ஆயிரத்தை திருடினர்.
பின்னர் 2 வாலிபர்கள் மட்டும் நகை-பணத்துடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர். வீட்டினுள் இருந்த மற்றொரு வாலிபர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ராஜேந்திரனின் தம்பி பாலசுப்பிர மணியன், அந்த வாலிபரிடம் நீ யார்? என கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர், கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

வாலிபர் கைது

அப்போது சுதாரித்துக்கொண்ட பாலசுப்பிரமணியன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து அந்த வாலிபரை தாக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரை, பாலசுப்பிரமணியன் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, விசாரணை நடத்தியதில், அவர் பகட்டுவான்பட்டியை சேர்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 வாலிபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story