லால்குடி போலீஸ் நிலையத்தை மின்வாரிய பணியாளர்கள் முற்றுகை-சாலை மறியல்


லால்குடி போலீஸ் நிலையத்தை மின்வாரிய பணியாளர்கள் முற்றுகை-சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Aug 2017 10:30 PM GMT (Updated: 11 Aug 2017 9:12 PM GMT)

மின்வாரிய ஊழியரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி லால்குடி போலீஸ் நிலையத்தை மின்வாரிய பணியாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

லால்குடி,

லால்குடியை அடுத்த பூவாளூர் துணை மின் நிலையத்தில் கம்பியாளராக (வயர்மேன்) பணிபுரிந்து வருபவர் மாரிமுத்து(வயது 50). இவர் லால்குடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், நேற்று முன்தினம் மாலை பூவாளூர் பகுதியை சேர்ந்த அபுதாகீர்மீராடி என்பவர், தனது வீட்டில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்து தருமாறு பூவாளூர் துணை மின் நிலைய அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டுக்கொண்டார். அப்போது நான், வேறு இடத்தில் வேலை செய்து கொண்டு இருந்ததால் வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. இந்நிலையில் அபுதாகீர்மீராடி, அவருடைய உறவினர் தவ்பிக் ஆகியோர் துணை மின் நிலைய அலுவலகத்திற்கு வந்து, அங்கு இருந்தவர்களை தரக்குறைவாக பேசினர். அப்போது அங்கு வந்த என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த புகார் தொடர்பாக அபுதாகீர்மீராடி உள்ளிட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாத தால் நேற்று காலை லால்குடி மின் கோட்டத்தில் பணிபுரியும் லால்குடி, பூவாளூர், வாளாடி, வெள்ளனூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் லால்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று லால்குடி போலீஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, மின்வாரிய ஊழியரை தாக்கியவர்களை கைது செய்து அழைத்து வரும் வரை களையப்போவதில்லை என்று கூறி அங்கேயே இருந்தனர். இதனால் போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் மதியம் வரை அவர்கள் காத்திருத்தும், அபுதாகீர்மீராடி உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வராததால், லால்குடி நான்கு ரோடு பகுதியில் மின்வாரிய பணியாளர்கள் சாலை மறியல் செய்தனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு செட்ரிக்இமானுவேல் தலைமையிலான போலீசார், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மின்வாரிய பணியாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story