திருவெறும்பூர் அருகே பெண் கொலை வழக்கில் தாய்-மகன் கைது


திருவெறும்பூர் அருகே பெண் கொலை வழக்கில் தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 11 Aug 2017 10:45 PM GMT (Updated: 11 Aug 2017 9:15 PM GMT)

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் அருகே உள்ள வாரியார்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது64). இவருடைய மனைவி முத்துலெட்சுமி.

திருவெறும்பூர்,

அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி ரேவதி(43). இவர்களுக்கு நவீன்குமார்(21) மற்றும் 14 வயதுடைய ஒரு மகன் என 2 மகன்கள் உள்ளனர். முத்துலெட்சுமியிடம், ரேவதி அடிக்கடி கடன் வாங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்தப் பகுதியில் சாலையோரத்தில் முத்துலெட்சுமி தலையில் பலத்த ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் ரேவதி மற்றும் அவருடைய இளைய மகனை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, முத்துலெட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து ரேவதி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;-

எனக்கு பல இடங்களில் கடன் இருப்பதால் அதனை அடைக்க முத்துலெட்சுமியிடம் கடனாக பணம் கேட்டேன். ஏற்கனவே அவருக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டி இருப்பதால் அவர் பணம் தர மறுத்தார். அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களிடம் வாங்கிய பணத்தை தருகிறேன். என் வீட்டிற்கு வாருங்கள், என்று அழைத்தேன். அதை நம்பிய அவர் சம்பவத்தன்று மாலை என் வீட்டிற்கு வந்தார். நானும், எனது இளைய மகன் மட்டுமே வீட்டில் இருந்தோம்.அப்போது முத்துலெட்சுமியிடம் நீங்கள் அணிந்திருக்கும் தாலி மற்றும் நகைகளை தாருங்கள். என் கடனை அடைத்து விட்டு 2 மாதங்களில் திருப்பி தருகிறேன் என்று கெஞ்சி கேட்டேன். அதற்கு அவர் பிடிவாதம் பிடித்ததால், கோபம் அடைந்த நான் அங்கு இருந்த வயரை எடுத்து அவர் கழுத்தை இறுக்கியதுடன், இரும்பு கம்பியால் தலையில் அடித்தேன்.இதில் அவர் அதே இடத்தில் இறந்து விட்டார்.

இதனை தொடர்ந்து அன்று இரவு முழுவதும் எங்கள் வீட்டிலேயே பிணத்தை மறைத்து வைத்திருந்து அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கழற்றி வைத்து கொண்டு அவரது உடலை எனது இளைய மகன் உதவியுடன் சாலையோரத்தில் கொண்டு போய் வீசி விட்டு வந்தேன். இதில் எங்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் ரேவதியிடம் இருந்து 10 பவுன் நகைகளை கைப்பற்றியதோடு, ரேவதியை கைது செய்து திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். இதேபோல் அவருடைய 14 வயது மகனையும் கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

Next Story