கடமையில் இருந்து தவற மாட்டேன் புதுச்சேரி வளர்ச்சிக்காக நான் பாடுபடுகிறேன்


கடமையில் இருந்து தவற மாட்டேன் புதுச்சேரி வளர்ச்சிக்காக நான் பாடுபடுகிறேன்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:45 PM GMT (Updated: 11 Aug 2017 9:23 PM GMT)

கடமையில் இருந்து தவற மாட்டேன். புதுச்சேரி வளர்ச்சிக்காக நான் பாடுபடுகிறேன் என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் ஆளுங்கட்சியினருக்கும், கவர்னருக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது துறைமுகம் தூர்வாருவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி இணைய தளம் மூலமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

நான் தற்காலிக நபராக இருக்கலாம். ஆனால் புதுவை நிரந்தரமானது. நான் எனது கடமையை தொடர்ந்து செய்வேன். நான் கவர்னராக பதவியேற்ற போதே புதுவை மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறி இருந்தேன். அதேபோல் புதுவை வளர்ச்சிகாக நான் பாடுபடுகிறேன். எனது பொறுப்பை நான் செய்வேன்.

அதே நேரத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்வது எனது கடமை. ஒரு திட்டத்தில் அதன் பலன், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல் என அத்தனையையும் அலசி பார்க்க வேண்டும். அதைத்தான் துறைமுக துறையிலும் செய்தோம். ஆனால் உரிய மாற்றம் ஏற்படவில்லை.

இந்த மாநிலத்தின் நிர்வாகி என்ற முறையில் சட்டங்களையும், விதிகளையும் மீறாமல் பணிகள் நடப்பதை கண்காணிப்பது எனது கடமை. அரசு எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு தெரிவிப்பது கடமை ஆகும். தவறான முடிவுகள் எடுத்தால் அது மக்களை பாதிக்கும். எதுவாக இருந்தாலும் உரிய ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் செயல்படுவதே சிறப்பானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story