மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கைக்கு எதிராக நாடுமுழுவதும் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்


மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கைக்கு எதிராக நாடுமுழுவதும் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்
x
தினத்தந்தி 12 Aug 2017 2:00 AM GMT (Updated: 11 Aug 2017 9:42 PM GMT)

மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கைக்கு எதிராக நாடுமுழுவதும் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்கரத் தெரிவித்தார்.

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தடுத்திடவும், நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது, சுரங்க பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களை உடனடியாக வெளியேற்றிட வேண்டும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெய்வேலி 17–வது வட்டத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் முத்துவேல் வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வேல்முருகன், ஜெயராமன், குப்புசாமி, மீனாட்சி நாதன், சி.ஐ.டி.யூ. பொருளாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்கரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் மூசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பிரகாஷ்கரத் பேசியதாவது:–

மத்தியில் ஆழும் பா.ஜ.க. அரசு இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவில் உள்ளது. என்.எல்.சி. நிறுவனம் நவரத்தினா அந்தஸ்து பெற்று இருந்த போதிலும் கடந்த காலங்களில் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சி செய்தது. இதை எதிர்த்து அனைத்து தொழிலாளர்களும் போராடியதின் விளைவாக அந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்தியாவில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயல்கிறது. இதனால் வேலை வாய்ப்புகள் பெருமளவில் பாதிக்கப்படும். இதை எதிர்க்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 8–ந்தேதி டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அதன் முடிவில் முதற்கட்டமாக டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துவது, அதை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி மத்திய அரசின் தனியார்மயமாக்கும் கொள்கைக்கு எதிராக போராடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இருந்த போதிலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விவசாயிகள் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை போக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருக்கிறது. இதற்கு அனைவரும் ஆதரவு அளித்திட வேண்டும். தமிழகத்தில் இந்துத்துவா ஆட்சியை நிலை நிறுத்த மத்திய பா.ஜனதா அரசு முயல்கிறது. தமிழர்கள் தங்களது கலாசாரத்யும், தமிழ் மொழியையும் விட்டு தரமாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், என்.எல்.சி. சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க துணை தலைவர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் திருஅரசு நன்றி கூறினார்.


Next Story