வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 22 மாணவ-மாணவிகள் காயம்


வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 22 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 12 Aug 2017 7:00 AM IST (Updated: 12 Aug 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில், 22 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறையில் செயின்ட் ஆன்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களை பள்ளி வேன் மூலம் தினமும் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து சென்று, பின்னர் மாலையில் வீட்டில் கொண்டு விடுவது வழக்கம்.

நேற்று காலையும் வழக்கம்போல் பள்ளி வேன் மரவநத்தம், வி.களத்தூர் பகுதி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. வேனை என்.புதூரை சேர்ந்த டிரைவர் சின்னராசு (வயது 25) ஓட்டினார். வேன் மரவநத்தம் அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி பனைமரத்தில் மோதி நின்றது.

22 மாணவ- மாணவிகள் காயம்

இதில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அஸ்வின் குமார்(வயது 12), தனுஷ் (9), நிசாந்த் (10), சந்துரு (8), நிரஞ்சனி (17), சிவரஞ்சனி (17), சபீதா(12) உள்பட 22 மாணவ-மாணவிகளும், டிரைவர் சின்னராசும் லேசான காயம் அடைந் தனர்.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து வேனுக்குள் இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விபத்து பற்றி அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் காயம் அடைந்த மாணவ-மாணவிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Next Story