காதலை ஏற்காததால் தீர்த்துக் கட்டியது அம்பலம் என்ஜினீயரிங் மாணவி வழக்கில் தாய்மாமன் கைது


காதலை ஏற்காததால் தீர்த்துக் கட்டியது அம்பலம் என்ஜினீயரிங் மாணவி வழக்கில் தாய்மாமன் கைது
x
தினத்தந்தி 11 Aug 2017 10:50 PM GMT (Updated: 11 Aug 2017 10:49 PM GMT)

காதலை ஏற்காததால் தீர்த்துக்கட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தாய்மாமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பாகல்கோட்டை அருகே மாயமான என்ஜினீயரிங் மாணவி வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலை ஏற்காததால் அவரை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலக்கிய போலீசார் மாணவியின் தாய்மாமன் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர்.

பாகல்கோட்டை (மாவட்டம்) டவுன் வித்யாகிரியில் வசித்து வந்தவர் ஷில்பா (வயது 20). தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22–ந் தேதி கல்லூரி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் வீடுகள் மற்றும் அவருடைய தோழிகளின் வீடுகளில் ஷில்பாவை தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது மகள் மாயமாகி உள்ளதாக நவநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால், போலீசார் முறையாக விசாரணையை நடத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். இதனால், ஷில்பாவின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், மாயமான தங்களது மகளை கண்டுபிடிக்காமல் துணை போலீஸ் சூப்பிரண்டு விட்டல் ஜகலி தலைமையிலான போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகவும், எங்களது மகளை கண்டுப்பிடித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தார்வார் ஐகோர்ட்டு கிளையில் ஷில்பாவின் பெற்றோர் மனு செய்தனர். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, மாயமான ஷில்பாவை கண்டுபிடித்து கொடுக்க பாகல்கோட்டை மாவட்ட போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் ஷில்பாவின் நிலை என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது ஷில்பா மாயமான வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. காதலை ஏற்க மறுத்ததால் அவரை அவருடைய தாய்மாமன் மகேஷ் தனது நண்பர்களான ஜாவித், வாசுரெட்டி ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து, பின்னர் அவரது உடலை கிருஷ்ணா ஆற்றில் வீசியது தெரியவந்தது. மேலும் கொலையை 3 பேரும் மறைத்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஷில்பாவை அவருடைய தாய்மாமன் மகேஷ் ஒருதலையாக காதலித்துள்ளார். அவருடைய காதலை ஷில்பா ஏற்க மறுத்து உள்ளார். இதனால் கோபமடைந்த மகேஷ், ஷில்பாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, சம்பவத்தன்று ஷில்பாவின் கல்லூரிக்கு மகேஷ் சென்றார். பின்னர், அவரை காரில் அழைத்து சென்று தனது நண்பர்கள் ஜாவித், வாசு ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து மூச்சுத்திணறடித்து ஷில்பாவை கொன்று உடலை கிருஷ்ணா ஆற்றில் வீசியுள்ளார். அதனைத்தொடர்ந்து, கொலையை மறைக்க அவர் தனது சகோதரி குடும்பத்துடன் சேர்ந்து ஷில்பாவை தேடும் பணியில் ஈடுபடுவதுபோல் நாடகமாடி வந்து உள்ளார்‘ என்றனர்.

இதையடுத்து ஷில்பாவை கொலை செய்ததாக அவருடைய தாய்மாமன் மகேஷ், வாசு ரெட்டி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். ஜாவித் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த வழக்கில் ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் துப்பு துலக்கி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story