பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நவம்பர் மாதம் நடக்கிறது
பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நவம்பர் மாதம் நடக்கிறது என்று மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில், நேற்று தகவல் தொடர்புத்துறை மந்திரி பிரியங்க கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தொழில்நுட்பம் சம்பந்தமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பதில் ‘பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு‘ நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவை உலகளவில் வலுப்படுத்த அனைத்து தொழில்நுட்ப நிகழ்வுகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டு வர விரும்புகிறோம். இது சர்வதேச அளவில் சாதனை படைப்பதற்கு அடிக்கல்லாக இருக்கும்.சிந்தனை, புதுமை மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடைபெறும் இந்த மாநாடு நவம்பர் மாதம் 16–ந் தேதி தொடங்கி 18–ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழில்அதிபர்களிடம் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி புதிய சகாப்தத்தை அடைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் என்பதை முன்காலத்தில் யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழில்நுட்பங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில்அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.விண்ணியல், பாதுகாப்பு துறை, தொலை தொடர்பு, எலெக்ட்ரானிக், இணையதள பாதுகாப்பு, ரோபோக்கள் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் சம்பந்தமான கருத்தரங்குகள் நடைபெறுகிறது. புற்றுநோய் உள்பட அரிய வகை நோய்கள் சம்பந்தமான கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டுக்கு ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை செலவு ஏற்படும். அனைத்து வகையான சேவைகளுக்கு மட்டும் இன்றி எண்ணம், புதுமை, கண்டுபிடிப்பு, முதலீடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, திறமை ஆகியவற்றிலும் பெங்களூரு பெயர் பெற்று விளங்க வேண்டும் என்பதை நிரூபிக்க நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.