பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
பள்ளிவாசல்களில் தொழுகை வேளைகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஆறுமுகநேரி,
பள்ளிவாசல்களில் தொழுகை வேளைகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகமது அபுபக்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் காயல்பட்டினத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
விழிப்புணர்வு ஊர்வலம்மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாட்டு இறைச்சிக்கு தடை, பொது சிவில் சட்டம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டு உள்ளது. இதனைக் கண்டித்து கேரளா மாநிலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.
இதேபோன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பு அணிகளான மகளிர் முஸ்லிம் அணி, சுதந்திர தொழிலாளர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த உள்ளோம். இந்தியாவில் 200 இடங்களிலும், தமிழகத்தில் 25 இடங்களில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறும்.
பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு பணிந்து...முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக பிரிந்தது. தற்போது அ.தி.மு.க. தனது சுய ஆட்சி மற்றும் உரிமைகளை இழந்து, பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு பணிந்து செயல்படுகிறது. பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு 50 எம்.பி.க்கள் இருந்தும், தமிழக மக்களுக்கு தேவையான எந்த கோரிக்கையையும் வென்றெடுக்க முடியவில்லை.
தமிழகத்தில் ஆளும் கட்சியினர் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகளை எதிர் கட்சியான தி.மு.க. செய்து வருகிறது. இதற்கு மற்ற கூட்டணி கட்சிகளும் உறுதுணையாக உள்ளோம். வருகிற 16–ந்தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்வோம்.
அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த...காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், சிறுபான்மை மக்களின் உரிமை பாதுகாப்பு மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 14–ந்தேதி நடக்கிறது. காயல்பட்டினத்தில் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும். இங்கு சிறுநீரக கோளாறு, புற்றுநோய் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தொடங்க வேண்டும்.
பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்க கூடாது. அவற்றை குறைந்தபட்சம் 5 வேளை தொழுகை நேரத்திலாவது பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.
மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செயலாளர் முகமது ஹசன், துணை செயலாளர் அப்துல் வாஹித், நகர தலைவர் ஹசன், செயலாளர் அபுசாலிஹ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.