தமிழக அரசு படுத்த படுக்கையாக உள்ளது தூத்துக்குடியில், திருநாவுக்கரசர் பேட்டி


தமிழக அரசு படுத்த படுக்கையாக உள்ளது தூத்துக்குடியில், திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2017 2:30 AM IST (Updated: 12 Aug 2017 4:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு படுத்த படுக்கையாக இருப்பதாக, தூத்துக்குடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தூத்துக்குடி,

தமிழக அரசு படுத்த படுக்கையாக இருப்பதாக, தூத்துக்குடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்குவதற்காக நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சென்றார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;–

படுத்த படுக்கை

தமிழக அரசின் செயல்பாடு படுத்த படுக்கையாக உள்ளது. இது இப்போது மட்டும் அல்ல. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருந்தே படுத்த படுக்கையாக தான் உள்ளது. தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டு விலக்கு அளித்திருந்தார். தற்போதைய அரசு 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளன. தமிழகத்தில் படித்த 1 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.

கட்டபஞ்சாயத்து

தற்போதைய ஆளும்கட்சி 3, 4 அணிகளாக பிரிந்து இருப்பதற்கு காரணம் மத்திய அரசு. அதன்மூலம் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற நினைத்தது. இது முடியாததால் தற்போது மீண்டும் பிரிந்த அணிகளை சேர்க்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு கட்டபஞ்சாயத்து போன்று உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 100–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை தமிழக சுகாதார துறை செயல் இழந்து காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அதன்பின்னர் அவர் கார் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு புறப்பட்டார்.

அப்போது தூத்துக்குடி மாநகர தலைவர் முரளிதரன், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story