அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் சாவு அரசு டாக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அரசு பெண் டாக்டர் உள்பட அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது28). மணிமேகலைக்கு கருத்தடை கருவி பொருத்தப்பட்டிருந்ததால் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அதனை அகற்றுவதற்காக மணிமேகலை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 7–ந்தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது உடலில் துளையுடன் புண் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து மணிமேகலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மணிமேகலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை டாக்டர்கள், செந்திலிடம் கூறி அவரிடம் கையெழுத்து பெற முயன்றுள்ளனர். ஆனால் செந்தில் உடன்படவில்லை.
இதனிடையே செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தவறான சிசிக்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் மணிமேகலை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் ½ மணி நேரம் மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தருமாறும், அதன் பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தில்குமார் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மணிமேகலைக்கு சரிவர சிகிச்சை அளிக்காத முதுநிலை உதவி மருத்துவ அலுவலர் சூரியபிரபா, மகப்பேறு உதவியாளர் ரமணி ஜீவா கேத்ரின் ஆகிய இருவரையும் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.