நாமக்கல் மலைக்கோட்டை சுவரில் ஏறி ‘செல்பி’ எடுக்கும் இளைஞர்கள் உயிர்பலி ஏற்படாமல் தடுக்கப்படுமா?


நாமக்கல் மலைக்கோட்டை சுவரில் ஏறி ‘செல்பி’ எடுக்கும் இளைஞர்கள் உயிர்பலி ஏற்படாமல் தடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 12 Aug 2017 10:30 PM GMT (Updated: 12 Aug 2017 9:07 PM GMT)

நாமக்கல் மலைக்கோட்டை சுவரில் ஏறி ‘செல்பி’ எடுக்கும் இளைஞர்கள் கீழே தவறி விழுந்து உயிரை பலி ஏற்படாமல் இருக்க போலீசார் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மலைக்கோட்டை மீது வரதராஜ பெருமாள் கோவில், தர்கா மற்றும் ஆயுத கிடங்கு போன்றவை உள்ளன. இங்குள்ள கோவில் மற்றும் தர்காவில் வழிபாடு செய்யவும், நகரின் அழகை கண்டு ரசிக்கவும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதுதவிர காதல் ஜோடிகளும் இந்த மலைக்கோட்டைக்கு வந்து இங்கு அமர்ந்து பேசி செல்வது வழக்கம். சமீபகாலமாக இந்த மலைக்கோட்டைக்கு வரும் இளைஞர்கள் மலையின் மீது எழுப்பப்பட்டு உள்ள சுமார் 5 அடி உயர சுவர் மீது ஏறி ‘செல்பி’ எடுத்து கொள்வதை காண முடிகிறது.

இவ்வாறு ‘செல்பி’ எடுக்கும் இளைஞர்கள் கால் தவறி கீழே விழுந்தால் உயிர்பலி ஏற்படுவது உறுதி. அதையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் ‘செல்பி’ மோகத்தால் கோட்டை சுவர் மீது ஏறி பல்வேறு சாகசங்களை செய்து வருகின்றனர். இது மலையின் அடிவார பகுதியில் இருந்து பார்க்கும் நம்மையே மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

எனவே உயிர் பலி ஏற்படாமல் தடுக்க காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் மலைக்ககாட்டை சுவரில் ஏறி ‘செல்பி‘ எடுக்கும் இளைஞர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story