பந்தலூர், கூடலூரில் நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கான நிலத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு


பந்தலூர், கூடலூரில் நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கான நிலத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் நீதிமன்றத்துக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவில் நீதிமன்றம் இல்லாததால் கடந்த 1997 முதல் 2011 வரை புதன்கிழமை மட்டும் நெல்லியாளம் நகராட்சியின் பழைய அலுவலக கட்டிடத்தில் கோர்ட்டு செயல்பட்டது. மற்ற நாட்களில் வழக்கு சம்பந்தமாக பொதுமக்கள் கூடலூருக்கு சென்று வந்தனர். இதனால் பந்தலூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இதையொட்டி நெல்லியாளம் நகராட்சி அலுவலக பழைய கட்டிடத்தில் 1–11–2011 அன்று கோர்ட்டு திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் நீதிமன்றத்துக்கு என தனியாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என வக்கீல்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி கோர்ட்டுக்கு புதிதாக கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். இதில் பந்தலூர் அரசு மாணவிகள் விடுதி அருகே அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார் பார்வையிட்டார். பின்னர் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கோர்ட்டு அமைந்தால் சாலை, வாகன நிறுத்த வசதிகள் செய்வதற்கு போதிய இடம் உள்ளதா? என ஆய்வு நடத்தினார். பின்னர் தற்போது செயல்பட்டு வரும் கோர்ட்டு கட்டிடத்தை பார்வையிட்டார்.

அப்போது நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, மகிளா கோர்ட்டு நீதிபதி முரளிதரன், பந்தலூர் மாஜிஸ்திரேட்டு பாலமுரளி, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன், கூடலூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முருகன், தாசில்தார் மீனாட்சி சுந்தரம் மற்றும் வக்கீல்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கூடலூரில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட நீதிபதி வடமலை, கூடலூர் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வன் உள்பட அதிகாரிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story