வால்பாறையில் வனத்துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து காட்டுயானை அட்டகாசம்


வால்பாறையில் வனத்துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 13 Aug 2017 5:15 AM IST (Updated: 13 Aug 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வனத்துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் அந்த யானையை வனத்துக்குள் விரட்ட முடியாமல் வேட்டைத்தடுப்பு காவலர்கள் திணறினர்.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டமாகவும், ஒற்றையாகவும் முகாமிட்டுவருகிறது. இதில் கடந்த 6 நாட்களாக வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் சோலைப்பாடி தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஒரு காட்டுயானை முகாமிட்டு வாழைமரங்களை சாப்பிட்டும் குடியிருப்பு பகுதியை சேதப்படுத்தியும் வருகிறது. இந்த யானை தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து வந்தது.

இந்த நிலையில் அந்த காட்டுயானை நேற்று நள்ளிரவு வெள்ளமலை எஸ்டேட் பகுதியிலிருந்து ஊசிமலை மட்டம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள வாழைமரங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. விடிவதற்குள் வாழைமரங்களை சாப்பிட்டு விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிடும் என்று எஸ்டேட் பகுதி மக்களும் வால்பாறை வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர்களும் காத்திருந்தனர்.

ஆனால் அந்த யானை விடிந்த பிறகும் குடியிருப்பு பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. மேலும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கான நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் தொழிலாளர்களை பாதுகாப்பாக வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு வீட்டுத்தோட்ட பகுதியில் நின்றிருந்த அந்த யானை குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் வனத்துறையினர் யானையை குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டுவதற்காக வனத்துறையின் வாகனத்தில் ஏறிச்சென்று சைரனை ஒலிக்கச்செய்தனர். ஆனால் அந்த யானை வனத்துறையின் வாகனத்தை எதிர்த்து வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த யானையை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வேட்டைத்தடுப்பு காவலர்களும், வனத்துறையினரும் திணறினர். இருந்தபோதிலும் யானையின் ஆவேசம் தணிந்த நிலையில், எஸ்டேட் தொழிலாளர்களின் உதவியுடன், பட்டாசு வெடித்து அந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் வனத்துறையினர் ஊசிமலை எஸ்டேட் மட்டம் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:– கடந்த ஒரு வாரமாக வெள்ளமலை, ஊசிமலை எஸ்டேட் பகுதியிலேயே காட்டு யானை முகாமிட்டு சுற்றித்திரிந்துவருவதால் எந்த நேரத்தில் அந்த யானை எந்த இடத்தில் வந்து நிற்கும் என்கிற நிலை உள்ளது. இதனால் அந்த யானையை கும்கி யானையை கொண்டுவந்து வனப்பகுதிக்குள் விரட்டு வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் காட்டுயானைகளின் நடமாட்டம் வால்பாறை பகுதியில் அதிகரிக்க தொடங்கிவிட்டதால் நிரந்தரமாக கும்கி யானை முகாம் வால்பாறை பகுதியில் அமைக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் இரவு நேரங்களில் யானைகளை விரட்டும்பணிக்கு வரும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு உரிய டார்ச் லைட்டுகள், மழைக்கான கோட்டுகள், காலனிகள் போன்ற உபகரணங்களை வனத்துறையினர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேட்டைத் தடுப்பு காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உலக யானைகள் தினமான நேற்று காட்டுயானை வனத்துறையின் வாகனத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story