நீதிபதிகளின் பற்றாக்குறையினால் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம்
நீதிபதிகளின் பற்றாக்குறையினால் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கூறினார்.
கோவை,
கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். அதன் பின்னர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள நீதிபதிகள் பயிற்சி மையத்தில் தொடக்க விழா நடந்தது. இதில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கலந்து கொண்டு பேசியதாவது:–
சுதந்திரத்துக்கு முன்பு இந்திய தொழிலாளர் நல சட்டம் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் மிகவும் பழமையானது என்பதால் அதில் திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. அந்த திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டத்தின் நிர்வாகிகளாக நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் உள்ளனர். தொழிலாளர் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் போது ஏழைகளாக உள்ள தொழிலாளர்களின் நிலையை வக்கீல்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நீதிபதிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. 1987–ம் ஆண்டு 10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் இருந்தனர். அது தற்போது 10 லட்சம் பேருக்கு 7 அல்லது 8 நீதிபதிகளாக குறைந்துள்ளது. சட்ட ஆணையத்தின்படி 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நடைமுறையில் அப்படி இல்லை. வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்களின் பங்கு மட்டுமல்லாமல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும் முகுகிய பங்கு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தொழிலாளர் பிரச்சினை தொடர்பான வழக்குகள் அதிகமாக உள்ளதாக கூறினார்கள். கோவை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வழக்குகள் உடனுக்குடன் தீர்வு காண முடியாததற்கு காரணம் நீதிபதிகள் பற்றாக்குறை தான். இதற்கு நாம் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பேசியதாவது:–
கோவை மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். இங்கு தொழிலாளர் பிரச்சினை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 400 தொழிலாளர் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன், கோவை வக்கீல்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபானி. மற்றும் கோவை மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக மகளிர் நீதிமன்ற நீதிபதி மணிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.