திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய நலக்குழும இயக்குனர் ஆய்வு


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய நலக்குழும இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2017 3:45 AM IST (Updated: 13 Aug 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்து வரும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தேசிய நலக்குழும இயக்குனர் டேரஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்,

அப்போது அவர் ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்று சுற்றி பார்த்ததுடன் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துறைகள் மூலம் டெங்கு மற்றும் பிற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போதுமான மருந்து, மாத்திரைகள்

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 73 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கம் இருப்பது ஆய்வக பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 67 பேர் தகுந்த சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 6 பேர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப உள்ளனர். டெங்கு மற்றும் பிற பருவ கால நோய்களுக்கு போதுமான மருந்து, மாத்திரைகள் மற்றும் பிற மருத்துவ வசதிகள் அனைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ளது.

42 நடமாடும் மருத்துவ குழுக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 42 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவக்குழுவில் ஒரு மருத்துவர், ஓரு மருந்தாளுனர், ஒரு செவிலியர், ஒரு டிரைவர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குமார், சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சேகர், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் வேல்முருகன் கணேஷ் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story