பழனியில் பணம், நகைக்காக இரும்புக்கடை உரிமையாளர் கொலையா? துப்பு துலக்க 5 தனிப்படை போலீசார் தீவிரம்


பழனியில் பணம், நகைக்காக இரும்புக்கடை உரிமையாளர் கொலையா? துப்பு துலக்க 5 தனிப்படை போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

பணம், நகைக்காக இரும்புக்கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் துப்பு துலக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பழனி,

பழனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு, பொள்ளாச்சியில் என்ஜினீயரிங் படிக்கும் ஸ்ரீராம், பிலிப்பைன்சில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மணிமாறன் என்ற 2 மகன்கள் உள்ளனர். முருகேசன் பழனியில் இரும்புக்கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம், அவருடைய மனைவியை கடையை பார்க்க சொல்லிவிட்டு, வசூலுக்காக வெளியில் சென்றார். அதன்பிறகு, அவர் கடைக்கு திரும்பவில்லை. அவரை தேடிய போது, வீட்டில் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பழனி நகர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய அந்த நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த கொலை, நகை, பணத்துக்காக அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஏனென்றால், முருகேசனின் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் மாயமாகி இருக்கிறது. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இதுதொடர்பாக முருகேசனின் மனைவியிடம் போலீசார் விசாரித்தபோது, வீட்டில் இருந்த 100 பவுன் நகைகளில் 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். 85 பவுன் நகைகள் லாக்கரில் இருந்ததால் அவர்களின் கண்ணில் படவில்லை என தெரிவித்து உள்ளார். மேலும், வீட்டில் இருந்த பெருமளவு பணத்தையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்றுவிட்டதாக கூறிய அவர், எவ்வளவு பணம் இருந்தது என்பது பற்றி தனக்கு தெரியவில்லை என தெரிவித்து உள்ளார்.

மர்மம் நீடிக்கும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் வைரம், புகழேந்தி உள்ளிட்டோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் முருகேசன் கொலை வழக்கில் துப்பு துலக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:

ரூ.1¼ கோடியில் புதிதாக வீடு வாங்க முருகேசன் திட்டமிட்டு இருந்தார். இதற்காக ரூ.20 லட்சத்துக்கு மேல் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வீடு வாங்குவதற்காக பல லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தாலும், எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தன்னுடைய மனைவியிடம் அவர் சொல்லவில்லை.

மேலும், தான் 1¼ கோடி ரூபாய்க்கு வீடு வாங்க போவதாக பலரிடமும் அவர் சொல்லி வந்தார். இதனால், அவர்களில் யாரோ சிலர் முருகேசன் வீட்டுக்கு சென்றால் பெருமளவு பணத்தை கொள்ளையடித்து விடலாம் என சதி திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதன்படி, அவருடைய வீட்டுக்குள் புகுந்து சதி திட்டத்தை அரங்கேற்ற முயன்றபோது, அங்கு முருகேசன் இருந்துள்ளார்.

இதனால், அவரை மர்ம நபர்கள் தீர்த்துக்கட்டிவிட்டு கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும், விசாரணை முழுமை பெற்ற பிறகுதான் கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்த விவரம் தெரியவரும். இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story