காவிரி பிரச்சினையில் இறுதி தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக வரும்


காவிரி பிரச்சினையில் இறுதி தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக வரும்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:47 AM IST (Updated: 13 Aug 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக வரும் என எதிர்பார்க்கிறேன் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா மாவினகெரே பகுதியில் பிரசித்தி பெற்ற பெட்டத ரங்கநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நான் செய்த நல்ல திட்டங்களால் என் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். எங்கள் கட்சிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ரங்கநாத சாமி அருளால் நாங்கள் மக்களிடம் நல்ல பெயரை எடுத்துள்ளோம். எங்கள் கட்சிக்கு மக்கள் தான் பலம். நாங்கள் எதிர்கொள்ள உள்ள போராட்டத்துக்கு (தேர்தல்) மக்கள் தான் எங்களின் ஊந்து சக்தி. மக்களின் ஆதரவோடு அடுத்த ஆண்டு (2018) நடக்கும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற முடியாது என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் எங்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

அடுத்த 15 நாட்களில் காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வர உள்ளது. தமிழ்நாட்டின் வாதங்களை நான் கவனித்து வருகிறேன். இந்த வழக்கில் கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். நீதிபதிகள் கர்நாடகத்தின் நிலையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டும். 1924–ம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி நான் சுப்ரீம் கோர்ட்டில் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வர உள்ளது.

இந்தியா–சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு காரணம் என்று யாரையும் குறிப்பிட மாட்டேன். ஒருவேளை போர் ஏற்பட்டால், அதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். கார்கில் போரில் இருந்ததை விட தற்போது இந்திய ராணுவம் பலமாக உள்ளது. இந்த பிரச்சினையில் யாரும் அரசியல் செய்யாமல், அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இந்தியாவில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொண்டுவர மோடி முயற்சி செய்து வருகிறார். அவருடைய முயற்சிக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக நான் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைக்க வேண்டாம்.

சரவணபெலகோலாவில் அமைந்துள்ள கோமதேஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகா மஸ்தகாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த பணிக்காக மாநில அரசு ரூ.78 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், மகா மஸ்தகாபிஷேகத்துக்கான பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. அரசு ஒதுக்கிய நிதியில் ஊழலும் நடந்துள்ளது. இதுபற்றி சித்தராமையாவிடம் நான் பேசினேன். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மஸ்தகாபிஷேக பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story