‘எந்த கட்சியிலும் சேர மாட்டேன்; விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன்’


‘எந்த கட்சியிலும் சேர மாட்டேன்; விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன்’
x
தினத்தந்தி 12 Aug 2017 10:21 PM GMT (Updated: 12 Aug 2017 10:21 PM GMT)

எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் நடிகர் உபேந்திரா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் நடிகர் உபேந்திரா அறிவித்துள்ளார். மேலும் அவர், மக்களின் கருத்துகளை கேட்டு கட்சியின் பெயர், சின்னம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் உபேந்திரா. இந்த நிலையில், நடிகர் உபேந்திரா அரசியலுக்கு வர இருப்பதாகவும், அதுபற்றி அவர் தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், மேலும் அவர் பா.ஜனதா கட்சியில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நடிகர் உபேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்கள் செலுத்தும் வரி பணம் மூலம் தான் சாதாரண தொழிலாளியில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை சம்பளம் வாங்குகிறார்கள். முதல்–மந்திரிக்கு கூட மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் மக்களுக்காக வேலை செய்ய தயாராக இல்லை. கர்நாடகத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த பணத்தில் என்ன பணிகள் நடக்கிறது, மக்களிடம் அது செல்கிறதா? என்பது தெரியவில்லை. மக்கள் வரிப்பணம் வீணாகப்போவது மட்டும் தெளிவாக தெரிகிறது.

மக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வி எதுவும் கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறப்பாக உள்ளன. அதனால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நான் முன்வந்துள்ளேன். அரசியலில் இறங்கவும் முடிவு செய்துள்ளேன். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், சாதி, பணம் தேவை. அது இல்லாமல் புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பணம் இருக்கும் இடத்தில் ஊழல், பிரச்சினைகள் நிச்சயமாக நடைபெறும். அதனால் சாதி, பணம் இல்லாத அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

அதற்காக தற்போது உள்ள கட்சி தலைவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறவில்லை. முதல்–மந்திரி சித்தராமையா, பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதாதளம்(எஸ்) தலைவர் குமாரசாமி சிறப்பாக பணியாற்றுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் திறமையாக ஆட்சி செய்கிறார். அதுபற்றி நான் பேசவில்லை. மக்கள் வரிப்பணம் வீணாகிறது, மக்கள் பணம் மக்களிடம் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அரசியலுக்கு வருகிறேன்.

நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன். தனிக்கட்சி தொடங்குவது குறித்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளேன். இதற்காக 3 இணையதள முகவரிகளை வெளியிட்டுள்ளேன். அந்த முகவரிகளில் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மக்களின் கருத்துகளை கேட்டபின்பு, கட்சியின் பெயர், சின்னம் பற்றி தெரிவிப்பேன்.

மக்களின் ஆதரவு இருந்தால் தனிக்கட்சி தொடங்கி அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் நான் உள்பட கட்சியில் சேருபவர்கள் போட்டியிடுவார்கள். பணம், சாதி இல்லாமல் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறேன். எனது கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள், அந்த தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினை பற்றி அறிந்திருக்க வேண்டும். தேர்தலில் நிற்பவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்.

மக்களிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு முதலாளியாக இருக்க நான் விரும்பவில்லை. சாதாரண தொழிலாளியாக இருக்க நினைக்கிறேன். நான் தொடங்கும் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுமோ, தோல்வி அடையுமோ என்ற எதிர்பார்க்கவில்லை. இது ஒரு புது முயற்சி. மக்கள் ஆதரவும், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இவ்வாறு நடிகர் உபேந்திரா கூறினார்.


Next Story