விக்கிரவாண்டியில் தடுப்பு கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது; 2 பெண்கள் பலி


விக்கிரவாண்டியில் தடுப்பு கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 12 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-13T03:57:33+05:30)

விக்கிரவாண்டியில் தடுப்பு கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

விக்கிரவாண்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி கவுரி (வயது 43). இவர் நேற்று தனது உறவினர்களுடன் சென்னையில் இருந்து சாத்தூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். அந்த காரை அதே ஊரைச்சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சென்ற போது, அந்த காருக்கு முன்னாள் விக்கிரவாண்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (60) என்பவர் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் சாலையின் மறுபக்கம் செல்வதற்காக தனது மொபட்டை திருப்பியதாக தெரிகிறது. இதை பார்த்த டிரைவர் கண்ணன் காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் கண் இமைக்கும் நேரத்தில் மொபட் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கவுரி மற்றும் அவருடைய உறவினர்கள் புவனேஸ்வரி (63), மணிகண்டன், ஸ்ரீமதி, ஆர்த்தி, அம்பிகா, டிரைவர் கண்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 8 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுரி, புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story