ரிக் வண்டியை வழிமறித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


ரிக் வண்டியை வழிமறித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 12 Aug 2017 10:42 PM GMT (Updated: 12 Aug 2017 10:42 PM GMT)

ஓமலூர் அருகே ஆழ்துளை கிணறு அமைக்காமல் சென்ற ரிக் வண்டியை வழிமறித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

ஓமலூர் அருகே குண்டுக்கல் ஊராட்சியில் பொனக்காட்டூர், கொங்குபட்டி காட்டுவளவு ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமங்களின் ஊர் பொதுக்கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வற்றி விட்டன.

இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராடி வந்தனர். இதையடுத்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டாருடன் குழாய் அமைக்க ரூ.4.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

சாலை மறியல்

அதன்படி, பொனக்காட்டூர் சுடுகாடு அருகே ஆழ்துளை கிணறு அமைக்க நேற்று அந்த பகுதிக்கு ரிக்வண்டி வந்தது. ஆனால், அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் இந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால், எனது ஆழ்துளை கிணறு பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்காமல் ரிக்வண்டி திரும்பிச்சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பெண்களும், ஆண்களும் அங்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று கூறி ரிக்வண்டியை வழிமறித்து நிறுத்தி பொனக்காட்டூர்–ஜோடுக்குளி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலைந்து சென்றனர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சொக்கலிங்கம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடமும், எதிர்ப்பு தெரிவித்த விவசாயிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.Next Story