புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்பது பகல் கனவு முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கு


புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்பது பகல் கனவு முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கு
x
தினத்தந்தி 13 Aug 2017 5:30 AM IST (Updated: 13 Aug 2017 4:28 AM IST)
t-max-icont-min-icon

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்பது பகல் கனவு போன்றது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விமான சேவை

கடந்த வாரம் நானும், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வும், புதிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து புதுச்சேரி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். நான் பாரளுமன்றத்தில் பணியாற்றும்போது அவருடன் நெருங்கி பழகியுள்ளேன். மத்திய மத்திரியாக இருந்தபோது பல நல்ல திட்டங்களை அவர் புதுச்சேரிக்கு வழங்கியுள்ளார். துணை ஜனாதிபதி பதவியிலும் சிறப்பாக செயல்படுவார்.

வருகிற 16–ந் தேதி காலை 10.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கும், விஜயவாடாவிற்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளாக விமான நிலையம் மூடப்பட்டு கிடந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியை நானும், அமைச்சர்களும் சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி மட்டுமின்றி, வியாபாரமும் வளர வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, கொச்சி, கோவை நகரங்களுக்கும் விமான சேவை தொடங்க வலியுறுத்தி வருகிறோம். ஒடிசா ஏர் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து சேலம், பெங்களூரு, சென்னை ஆகிய ஊர்களுக்கு சிறிய விமானத்தை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.

துறைமுக பணிக்கு முட்டுக்கட்டை

புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்க மத்திய கப்பல் துறை மந்திரி முன்னிலையில் சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்து அதற்கான பணிகள் நடந்தன. கப்பல் வந்து செல்லும் வகையில் துறைமுக கழிமுக பகுதியில் 3 லட்சம் கியூபிக் மீட்டர் மணலை அகற்றும் பணியில் மத்திய அரசின் டிரஜிங் கார்பரே‌ஷன் நிறுவனம் ஈடுபட்டது. தற்போது 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

இந்தநிலையில் புதுவையில் துறைமுகம் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ஒரு அமைப்பு முட்டுக்கட்டை போடும் பணியை ஆரம்பித்துள்ளது. புதுச்சேரி வளர்ச்சி பெற துறைமுகம் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெற வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியின் பொருளாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஓட்டல்களிலும், விடுதிகளிலும் அதிகம் பேர் தங்கும் நிலை உருவாகும்.

காரைக்கால் துறைமுகம் செயல்படுவதன் மூலம் நடப்பு காலாண்டிற்கு ரூ.3 கோடியே 14 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு துறைமுக திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

பகல் கனவு

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு, கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாலும் சபாநாயகர் அதை ஏற்க மறுத்து தனது உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் புதுவையில் ஆட்சி மலரப்போவதாக பா.ஜ.க.வினர் அறிக்கை விட்டுள்ளனர்.

சட்டசபையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில் பா.ஜ.க. ஆட்சி மலரப்போவதாக கூறுவது விந்தையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில்கூட புதுச்சேரியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் 2 குறைவாகத்தான் கிடைத்தது. பா.ஜ.க. புதுச்சேரியில் வேர் ஊன்ற முடியாத கட்சி.

கடந்த சட்டசபை தேர்தலில் 18 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து தோற்றுப் போனவர்கள். எனவே புதுவையில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி என்று கூறுவது பகல் கனவே தவிர வேறு அல்ல.

7–வது ஊதியக்குழு விவகாரம்

மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல திட்டங்களை கேட்டு வருகிறோம். புதுச்சேரியை மத்திய நிதி கமி‌ஷனில் சேர்க்க, மத்திய நிதித்துறை மந்திரியை வலியுறுத்தி உள்ளேன். அப்படி சேர்த்தால் தற்போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் 27 சதவீத நிதியானது 42 சதவீதமாக உயரும்.

புதுச்சேரி அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களும் 7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு நிதி கொடுத்தால் அவர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். புதுச்சேரி பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவும், பென்‌ஷனாகவும் செலவு செய்யப்படுகிறது.

இதனால் அரசு நிறுவனங்களில் கொல்லைப்புறமாக பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு சம்பளம் தர முடியாத சூழல் உள்ளது. அந்த நிறுவனங்களை மேம்படுத்த சட்டசபையில் அறிவித்தபடி குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் வளர்ச்சி பெற அனைத்து துறையிலும் விரிவாக, வேகமாக திட்டங்களை நிறைவேற்ற ஒவ்வொரு துறையாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் முதல் வாரம் முதல் வாரந்தோறும் ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்கப்பட்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.


Next Story