முதல்–அமைச்சரின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்–அப்பில் வெளியீடு போலீசார் விசாரணை
முதல்–அமைச்சரின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்–அப்பில் வெளியிட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்–அப்பில் மர்ம ஆசாமிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வரதராஜ் (வயது 49) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் கேலியாக சித்தரிக்கப்பட்டு வாட்ஸ்–அப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதல்–அமைச்சரின் முகத்தை மட்டும் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்குள் கேலியாக சித்தரித்து, அதற்கு பின்னால் மதுப்பாட்டில் அடுக்கி வைத்திருப்பது போன்றும், சாராயம் வைத்து கொள்ள அனுமதித்த பழனியம்மாள் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவுமுதல்–அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அ.தி.மு.க. தொண்டர்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும் வாட்ஸ்–அப்பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அர்த்தனாரீஸ்வரன் ஆகியோர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்–அமைச்சரின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்–அப்பில் வெளியிட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து சைபர் கிரேம் போலீசார் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படத்தை வெளியிட்ட மர்ம ஆசாமிகளை கைது செய்துவிடுவோம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.