டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டும்
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டும் என்று ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சம்பத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஹன்ராஜ் வர்மா பேசியதாவது:–
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கையில் முழுகவனம் செலுத்தி வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யக்கூடிய கொசுக்கள் உருவாகாமல் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டும். தொடர்ச்சியாக கள பணியாளர்கள் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஹன்ராஜ் வர்மா சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார்.