மீனம்பாக்கத்தில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து போக்குவரத்து பாதிப்பு
மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 25). கார் டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு கிண்டிக்கு வந்த இவர் அங்கு இருந்து காரில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைத்தடுமாறிய கார் சாலையின் தடுப்பில் மோதியது.
இதில் நீலகண்டன் லேசான காயம் அடைந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் நீலகண்டனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய கார் சாலை நடுவே நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்பு போலீசார் காரை சாலையின் ஓரத்திற்கு அப்புறப்படுத்தினார்கள். இதுபற்றி மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.