பலத்த மழை காரணமாக மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
மதுரையில் பலத்த மழை காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
மதுரை,
மதுரையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதனை சுற்றி 18 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால், மதுரை விமான நிலைய சுற்றுச்சுவரில் ஒரு பகுதி (சுமார் 50 அடி நீளம்) இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் சுற்றுச்சுவர் இடிந்த பகுதியில் கம்புகள் ஊன்றி தற்காலிக தடுப்புகள் அமைத்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் மர்மநபர்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக இந்த தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. சேலம் இரும்பாலை அருகே தளவாய்பட்டி நாகர்கோவில் வட்டம் பகுதியில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. அப்போது அலமேலு (வயது 63) என்பவர் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நேற்று மழை பெய்தது. பி.கே.பெத்தனப்பள்ளியை சேர்ந்த சரளா (45) நேற்று காலை தன் வயல் பகுதியில் உள்ள மின்கம்பம் அருகே சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சரளாவின் உடல் மின் கம்பத்தில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதிகாலை வரை விட்டு, விட்டு பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் ஒரு சில இடங்களில் லேசான மழை இருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மழை நீடித்தது. விடிய, விடிய பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. திண்டிவனத்தில் 50–க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழையால் நீர்வரத்து வாய்க்கால், ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நாகநதி, கமண்டலநாக நதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வேலூரில் நேற்று அதிகாலை பலத்த மழை கொட்டியது. இதனால் ஒரு வீடு இடிந்து விழுந்தது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவியது.