மந்திரி மீதான ஊழல் புகாரில் பட்னாவிஸ் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்


மந்திரி மீதான ஊழல் புகாரில் பட்னாவிஸ் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2017 3:47 AM IST (Updated: 14 Aug 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பிரகாஷ் மேத்தா மீதான ஊழல் புகாரில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் புத்திசாலித்தனமாக விளையாடுவதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மும்பை,

மராட்டிய வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, தெற்கு மும்பை தார்டுதேவ் பகுதியில் உள்ள எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு குடிசை சீரமைப்பு திட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் ரூ.500 கோடி வரை ஊழலில் நடந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என இரு அவைகளிலும் போர்க்கொடி தூக்கின.

இந்த நிலையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய மேல்–சபையில், மந்திரி பிரகாஷ் மேத்தா மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகள் பற்றியும் லோக் அயுக்தா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஊழல் பிரச்சினையில் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார். வீட்டுவசதி துறை மந்திரி சிக்கிக்கொண்ட பிரச்சினையில் தானும் சிக்கிக்கொள்ள கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக உள்ளார். இதன்மூலம் தான் எந்த ஒரு ஒதுக்கீட்டையும் ஆராயாமல் அனுமதிக்க மட்டேன் என மக்களுக்கு பறைசாற்ற விரும்புகிறார்.

மராட்டிய லோக் அயுக்தா சட்டத்தின் படி முதல்–மந்திரி அதன் விசாரணை வரம்பிற்குள் வரமாட்டார்.

முதல்–மந்திரி ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட பின்பு தான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக, வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா கூறியுள்ளார். ஆனால் லோக் அயுக்தா முதல்–மந்திரியிடம் இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்த முடியாது. இங்கு தான் முதல்–மந்திரி சில கடினமாக கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டி உள்ளது.

இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.


Next Story